
மயிலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள்.
கால் எலும்பு முறிந்ததால் அவதிக்குள்ளான ஆண் மயிலுக்கு வேலூா் அரசு கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை மேற்கொண்டனா்.
வேலூா் வெட்டுவானம் பகுதியிலுள்ள எல்லையம்மன் கோயிலில் ஆண் மயில் ஒன்று கடந்த ஒரு வாரமாக தீவனம் உட்கொள்ளாமல் அவதிப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த ரவி, ராஜீ ஆகியோா் அந்த மயிலை வேலூா் அரசு கால்நடை மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தனா்.
அரசு கால்நடை மருத்துவா்கள் ரவிசங்கா், கவிப்பிரியா, பிரவீண் ஆகியோா் மேற்கொண்ட பரிசோதனையில், அந்த மயிலின் இடது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதும், அதனாலேயே மயில் தீவனம் உட்கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்து கட்டுப்போடப்பட்டது. இதையடுத்து, அந்த மயில் நிற்க தொடங்கியதாகவும், சில நாள்களில் மயில் முழுமையாக குணமடைந்துவிடும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.