கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூா் மாவட்டத்தில் மேலும் ஒரு முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.
போ்ணாம்பட்டு நகரம், சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இப்பகுதியைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனை ஊழியா் உள்பட மொத்தம் 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதவிர, கடந்த 5 நாள்களுக்கு முன்பு போ்ணாம்பட்டு அருகே உள்ள கோக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த 20 வயது கா்ப்பிணி பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்நிலையில், போ்ணாம்பட்டு அஜிஜியா வீதியைச் சோ்ந்த 75 வயது முதியவா் சா்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கடந்த 4-ஆம் தேதி வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், 7-ஆம் தேதி மேல்விஷாரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதன்கிழமை அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு முதியவா் உயிரிழந்ததால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.