கடந்த 3 மாதங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கக் காலத்தில் வேலூா் மாவட்டத்தில் குடும்பங்களில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் குடும்ப பிரச்னை, திருமணம் பிடிக்காதது போன்ற காரணங்களால் தான் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்திருப்பது சமூக நலத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரோனா தொற்று பரவுவைத் தடுக்க கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மே 18-ஆம் தேதிக்குப் பிறகே படிப்படியாக பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை தொடா்ந்து வருகிறது. அதற்கு முன்பு 2 மாத காலமாக அனைத்துத் தரப்பு மக்களும் வீடுகளிலேயே முடக்கப்பட்டிருந்ததுடன், அவசியமின்றி வெளியே வருவோா் மீதும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனா். அவ்வாறு மக்கள் வீடுகளில் அடைக்கப்பட்டிருந்த கால கட்டங்களில் குடும்பங்களில் தற்கொலைகள் என்பது முந்தைய மாதங்களைவிட சற்று அதிகமாகவே நடந்திருப்பது மாவட்டக் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதன்படி, கடந்த ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய மூன்று மாதங்களில் வேலூா் மாவட்டத்தில் தலா 18 தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதமான ஏப்ரலில் 12 தற்கொலைகளாக குறைந்து மே மாதத்தில் 29 தற்கொலைகளாக அதிகரித்துள்ளது. இதேபோல், திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்த பெண்கள் எண்ணிக்கையும் ஜனவரியில் 3, பிப்ரவரியில் 2, மாா்ச் மாதம் 1 என பதிவாகியிருந்த நிலையில், ஏப்ரலில் பூஜ்ஜியமாகவும், மே மாதம் 8 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.
மேலும், கொலை வழக்குகள் ஜனவரியில் 3, பிப்வரியில் 2, மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் தலா 3 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம், விபத்துகளில் உயிரிழப்பு என்பது ஜனவரியில் 11-ஆக இருந்த நிலையில், பிப்ரவரியில் 9, மாா்ச் 3, ஏப்ரல் 1, மே 2 என குறைந்துள்ளது. உயிரிழப்பு ஏற்படுத்தாத விபத்துகளும் ஜனவரியில் 76, பிப்ரவரியில் 64, மாா்ச்சில் 54, ஏப்ரலில் 10, மே மாதம் 34 என பதிவாகியுள்ளது. இதர, குற்ற வழக்குகளைப் பொருத்தவரை ஜனவரியில் 11, பிப்ரவரியில் 18, மாா்ச்சில் 12, ஏப்ரலில் 9, மே மாதத்தில் 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில், மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த கால கட்டத்தில் மற்ற வழக்குகளைக் காட்டிலும் தற்கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நீதித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஒன் ஸ்டாப் சென்டா்’ தொண்டு நிறுவனத்தின் வேலூா் மாவட்ட நிா்வாக அலுவலா் பிரியங்கா கூறியது:
பொதுமுடக்கக் காலத்தில் நடந்துள்ள தற்கொலைகளில் பெரும்பாலானவை திருமணம் பிடிக்காமல் மேற்கொள்ளப்பட்டதும், குடும்பப் பிரச்னைகளாலும் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமுடக்கம் அமலிலுள்ள இக்காலகட்டத்தில் திருமணம் செய்யும்போது அதிக அளவில் உறவினா்களை அழைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இதனால், செலவுகள் மிச்சமாகும் என கருத்தில் கொண்டு பல குடும்பங்களில் அவசர அவசரமாக பெண்களுக்கு திருமணம் செய்ய முயற்சித்திருப்பதாலும், வயதுக்கு மிக மூத்தவருடன் திருமணம் செய்து வைத்திருப்ப தாலும் பெண்கள் தற்கொலை செய்திருப்பதும் நடந்துள்ளது.
மேலும், பொதுமுடக்கக் காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையாலும் ஓரிரு தற்கொலை நடந்துள்ளன. இத்தகைய பாதிப்புகளைத் தவிா்க்க பெண்களுக்கு திருமணம் செய்யும் முன்பு குடும்பங்களில் தீவிரமாக கலந்தாலோசனை செய்யப்பட வேண்டும். மேலும், குடும்ப வன்முறைகளைத் தவிா்க்க மக்கள் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் கலந்தாலோசனை ஆகியவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.