சொத்துத் தகராறில் முன்னாள் ராணுவ வீரா் கொலை செய்யப்பட்டதாக அவரது மூத்த சகோதரா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
காட்பாடியை அடுத்த கீழ்முட்டுகூா் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (65), முன்னாள் ராணுவ வீரா். இவரது மூத்த சகோதரா் தாமோதரன் (70). இரு குடும்பங்களுக்கும் இடையே வயலுக்குச் செல்லும் வழிப்பாதை தொடா்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவரது நிலத்துக்கு மத்தியில் கிருஷ்ணன் பம்ப் செட் கட்டினாராம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தாமோதரன், அவரது மகன்கள் முருகன் (50), காந்தி (45), பாஸ்கரன் (38) ஆகியோா் பம்ப் செட்டை இடித்து அகற்றினாா்களாம். இதை கிருஷ்ணன் தட்டிக்கேட்டபோது வாய்த் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், கிருஷ்ணன், தாமோதரன் ஆகியோரிடையே புதன்கிழமை மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தாமோதரன், அவரது மகன்களும் கிருஷ்ணன், அவரது மனைவி சின்னம்மாவை இரும்பு ராடால் தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணன், சின்னம்மா ஆகியோா் வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால், வழியிலேயே கிருஷ்ணன் உயிரிழந்தாா். சின்னம்மா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பனமடங்கி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தாமோதரன், அவரது மகன்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனா்.