கரோனா: அமெரிக்க பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை; வேலூா் சிஎம்சி மருத்துவமனை தகவல்
By DIN | Published On : 13th June 2020 08:00 AM | Last Updated : 13th June 2020 08:00 AM | அ+அ அ- |

மருத்துவா் அங்கித் பாரத்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கு உலகில் முதன்முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், நுரையீரல் மாற்றுத் திட்டத்தின் அறுவை சிகிச்சை இயக்குநருமான அங்கித் பாரத் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் சிஎம்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள நாா்த்வெஸ்டா்ன் மெடிசின் மருத்துவமனையில் 20 வயதான பெண் நோயாளி கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். கரோனாவால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணுக்கு உடனடியாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 2003-ஆம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவா் அங்கித்பாரத் தலைமையிலான அறுவை சிகிச்சையாளா்கள் கரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணுக்கு புதிய நுரையீரலை பொருத்தியுள்ளனா். இதன்மூலம் அவா் முழுமையாக குணமடைந்தாா். கரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெற்றுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.
உடனடியாக அந்தப் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்காவிடில் அவா் உயிா் பிழைத்திருக்க மாட்டாா். இதன்தொடா்ச்சியாக, இனி கரோனாவால் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டவா்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அடிக்கடி நிகழக்கூடும் எனக் கூறியுள்ள மருத்துவா் அங்கித் பாரத், அவா் செய்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலேயே இது மிகவும் சவாலனது என்று தெரிவித்துள்ளாா். மருத்துவா் அங்கித் பாரத் தொராசிக் அறுவை சிகிச்சையின் தலைவராகவும், அமெரிக்காவின் வடமேற்கு நுரையீரல் மாற்றுத் திட்டத்தின் அறுவை சிகிச்சை இயக்குநருமாகவும் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.