வேலூர் தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு ஒருவர் பலி
By DIN | Published On : 16th June 2020 12:37 PM | Last Updated : 16th June 2020 12:38 PM | அ+அ அ- |

கரோனா நோய் தொற்று காரணமாக ஆம்பூரைச் சேர்ந்தவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார்.
ஆம்பூரை சேர்ந்த 65 வயது முதியவர் சென்னை பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது ஆம்பூருக்கு வந்து சென்றுள்ளார். கடந்த ஜூன் 9-ம் தேதி காய்ச்சல் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை இரவு இறந்தார். அவரது சடலம் ஆம்பூருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து அவருடைய வீடு இருக்கும் பகுதியில் நகராட்சி ஆணையாளர் த. செளந்தரராஜன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்று கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கரோனா நோய் தொற்று காரணமாக ஆம்பூரை சேர்ந்தவர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட இருவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...