பரவும் கரோனா : வேலூரில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த ஆலோசனை; கடைகள் அடைப்பு

கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்திலும் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
வேலூர் லாங்கு பஜாரில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.
வேலூர் லாங்கு பஜாரில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.


வேலூர்: கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்திலும் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வேலூர் மாநகரில் முக்கிய வர்த்தக பகுதிகளான நேதாஜி மார்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜார், சாரதி மாளிகையிலுள்ள அனைத்துக் கடைகளும் வியாழக்கிழமை முதல் அடைக்கப்பட்டுள்ளன.

சென்னையைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் புதன்கிழமை வரை 271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து முறையான அனுமதியின்றி அதிகளவில் மக்கள் வருவதும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் திரள்வதுமே வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் முன்னோட்டமாக மாவட்டம் முழுவதும் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து மளிகை, காய்கறிக் கடைகளும் செவ்வாய்க்கிழமை முதல் தினமும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வேலூர் மாநகரின் முக்கிய வர்த்தக பகுதிகளான நேதாஜி மார்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜார், சாரதி மாளிகை கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் கூடுவதால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனைத் தவிர்த்திட அப்பகுதிகளிலுள்ள அனைத்துக் கடைகள் மட்டுமின்றி டாஸ்மாக் மதுக்கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மீண்டும் வியாழக்கிழமை முதல் மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பொதுமுடக்கத்தால் இப்பகுதிகளில் மார்ச் 25ஆம் தேதி முதல் அடைக்கப்பட்ட அனைத்து கடைகளும் ஜூன் 1ஆம் தேதி முதலே மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், திறக்கப்பட்ட சில வாரங்களில் அக்கடைகள் அனைத்தும் மீண்டும் அடைக்கப்பட்டதால் வியாபாரிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக நேரக்கட்டுப்பாட்டுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து முறையான அனுமதியின்றி வருபவர்களைத் தடுக்கவும், மாவட்டத்துக்குள் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும் சென்னையைப் போன்றே வேலூர் மாவட்டத்திலும் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்திட சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான பரிசீலனைக்கு பிறகு ஓரிரு நாட்களில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com