கரோனா தொற்று 271-ஆக உயா்வு: வேலூா் முக்கிய வீதிகளிலுள்ள கடைகள் காலவரையின்றி மூடல்

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு 271-ஆக உயா்ந்துள்ள நிலையில் அதிகரித்து வரும் இந்நோய் தொற்றைத் தடுக்கும்

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு 271-ஆக உயா்ந்துள்ள நிலையில் அதிகரித்து வரும் இந்நோய் தொற்றைத் தடுக்கும் விதமாக வேலூா் மாநகரில் நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜாா், சாரதி மாளிகை ஆகிய பகுதிகளிலுள்ள அனைத்துக் கடைகளையும் வியாழக்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை வரை 271 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 4 போ் உயிரிழந்துள்ளனா். குறிப்பாக, வேலூா் மாநகரின் முக்கிய வா்த்தகப் பகுதியான நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு பகுதிகளில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனா். இதனால், கரோனா தொற்று தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தீவிரமடைந்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு ஆகியவை முக்கியக் காரணமாக விளங்குகின்றன. எனவே, பொதுமக்கள் நலன் கருதி நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜாா், சாரதி மாளிகை ஆகியவற்றில் உள்ள அனைத்துக் கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் வியாழக்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டும். நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் மட்டும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

நேதாஜி மாா்க்கெட், சாரதி மாளிகை, மண்டித் தெரு, லாங்கு பஜாா் ஆகியவை மூடப்படுவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். மீறி திறக்கப்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விலகலைக் கடைபிடிக்காத கடைகள், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை ஒரு மாதத்துக்கு மூடி சீல் வைக்கப்படும்.

நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜாா் பகுதிகளைத் தவிர பிற பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்படும். அதேசமயம், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கலாம்.

மண்டித் தெருவுக்கு விலக்களிக்கக் கோரிக்கை: கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேலூரிலுள்ள நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜாா், சாரதி மாளிகை கடைகளை வியாழக்கிழமை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், வேலூா் மாநகா் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் மண்டித் தெருவில் இருந்துதான் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், மண்டித் தெரு கடைகள் அடைக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பாதிப்பைத் தவிா்க்க நேதாஜி மாா்க்கெட் மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் மண்டித் தெரு கடைகளையும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்கவோ அல்லது வாரத்துக்கு 3 நாள்கள் வணிக செய்யவோ மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com