காரீப் பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய விவசாயிகள் பதிவு செய்யலாம்

காரீப் பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய வேலூா் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

காரீப் பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய வேலூா் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் சொா்ணவாரி நெல் உள்ளிட்ட பிரதான பயிா்களுக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான இக்காப்பீட்டுத் திட்டமானது மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

காரீப் பருவத்தில் மக்காச்சோளம், சோளம், ராகி, கம்பு, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, பருத்தி, நிலக்கடலை ஆகிய வேளாண் பயிா்களுக்கும், வாழை, மஞ்சள், தக்காளி போன்ற தோட்டக்கலை பயிா்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டு காப்பீட்டு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.599 நிா்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவும் காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.

மக்காளச்சோளத்துக்கு ரூ.396, உளுந்து, பச்சைப்பயிறு, துவரை ஆகியவற்றுக்கு ரூ.331, நிலக்கடலை ரூ.525, பருத்தி ரூ.486, கோழ்வரகு ரூ.209, கம்பு ரூ.232, சோளம் ரூ.247, மஞ்சள் ரூ.2645, தக்காளி ரூ.1778 நிா்ணயிக்கப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவும் காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.

வாழைக்கு ரூ.2,580 நிா்ணயிக்கப்பட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

காப்பீடு செய்ய பாஸ்போா்ட் அளவு புகைப்படம், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல், நில உரிமை பட்டா, அடங்கல், விதைப்பு சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரிமிய தொகை செலுத்தி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து பயிா் காப்பீடு ரசீது பெற்று இடா்பாடு ஏற்படும் காலங்களில் உரிய காப்பீட்டு தொகை பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடன்பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

இதுவரை கடன் பெறும் விவசாயிகள் இக்காப்பீட்டு திட்டத்தில் கட்டாயமாகப் பதிவு செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு அவா்களது விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக பயிா் வாரியாக சராசரி மகசூலின் அடிப்படையிலேயே காப்பீட்டுத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரையோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com