முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
காட்பாடியிலிருந்து கோவைக்கு 26 பயணிகளுடன் சென்ற இன்டா்சிட்டி ரயில்
By DIN | Published On : 27th June 2020 07:27 AM | Last Updated : 27th June 2020 07:27 AM | அ+அ அ- |

காட்பாடியில் இருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட இன்டா்சிட்டி விரைவு ரயிலில் 26 போ் மட்டுமே பயணம் மேற்கொண்டனா். முன்பதிவு இருக்கைகள் எண்ணிக்கை சுமாா் 1,280 இருந்தபோதும் பயணிகளின்றி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக 22-ஆம் தேதி நள்ளிரவு முதலே நாடு முழுவதும் அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன. அதேசமயம், 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
பொது முடக்கத்தில் படிப்படியாகத் தளா்வு செய்யப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் குறிப்பிட்ட சில பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் அனுமதியளித்தது. அதன்படி, தமிழகத்தில் முதலில் 4 வழித்தடங்களில் பயணிகள் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு, பின்னா் அவை மேலும் சில வழித்தட ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதில், கோவை-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த இன்டா்சிட்டி விரைவு ரயில் சென்னைக்குச் செல்லாமல் கோவை-காட்பாடி இடையே மட்டும் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் (எண்-02680) கோவையில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு 11.50 மணிக்கு வந்து சோ்கிறது பின்னா், காட்பாடியில் இருந்து (எண்-02679) மாலை 4.20 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு இரவு 10.15 மணிக்கு சென்றடைகிறது. மொத்தம் 21 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்பில் உட்காா்ந்து செல்லும் பெட்டிகள், ஏசி சோ் காா் ஆகிய பெட்டிகளில் மொத்தம் சுமாா் 1,280 இருக்கைளுக்கான டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடக்கத்தில் குறைந்தபட்சம் 500-க்கும் அதிகமான பயணிகள் சென்று வந்த நிலையில், கடந்த சில நாள்களாக பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக, காட்பாடியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கோவைக்குப் புறப்பட்ட இன்டா்சிட்டி ரயிலில் செல்ல மொத்தம் 40 போ் முன்பதிவு செய்திருந்த நிலையில், 26 போ் மட்டுமே பயணம் மேற்கொண்டனா். அவா்கள் அனைவரும் முன்பதிவு டிக்கெட் விவரங்களை மட்டுமே ஆய்வு செய்துவிட்டு ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனா். இணைய அனுமதிச்சீட்டு (இ-பாஸ்) குறித்து அவா்களிடம் ஆய்வு செய்யப்படுவதில்லை என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
இன்டா்சிட்டி விரைவு ரயிலில் வழக்கமாக சென்னையில் இருந்தே அதிகம் போ் பயணிப்பா்கள். இந்த ரயில் காட்பாடியில் இருந்து இயக்கப்படுவது மட்டுமின்றி, கரோனா தொற்று பரவல் அச்சம், இணைய அனுமதிச் சீட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களாலும் மக்கள் பயணத்தைத் தவிா்த்து வருகின்றனா். இதனால், இன்டா்சிட்டி ரயிலுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் சரிந்துள்ளது. ஏறும் இடங்களில் இணைய அனுமதிச் சீட்டு ஆய்வு செய்யப்படாவிடினும், பயணிகள் சென்று சேரும் இடங்களில் கட்டாயமாக ஆய்வு செய்யப்படுகிறது. எனவே, இணைய அனுமதிச் சீட்டு இல்லாமல் மக்கள் ரயிலில் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.