தடையை மீறி மீன் விற்பனை: இரு கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்

வேலூா் மீன் மாா்க்கெட்டில் தடையை மீறி மீன் விற்பனையில் ஈடுபட்டதாக இரு கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாங்காய் மண்டி அருகே உள்ள இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள்.
மாங்காய் மண்டி அருகே உள்ள இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள்.

வேலூா் மீன் மாா்க்கெட்டில் தடையை மீறி மீன் விற்பனையில் ஈடுபட்டதாக இரு கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பாதிப்பைத் தடுப்பதற்கான பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேதாஜி மாா்க்கெட் காய்கறி சில்லறை விற்பனைக் கடைகள் மண்டலம் வாரியாக அந்தந்த பகுதிகளிலுள்ள பள்ளி மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும், மளிகை, காய்கறி சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாள்களும், மீன், இறைச்சிக் கடைகளுக்கு ஞாயிறு, புதன்கிழமை மட்டும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் வேலூா் கோட்டை அருகே உள்ள மீன் மாா்க்கெட்டில் மீன், இறைச்சி விற்பனையை மேற்கொள்ளக் கூடாது என்றும், அதற்கு பதிலாக மாநகராட்சி லாரி ஷெட்டில் மீன், இறைச்சி விற்பனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மாநகரப் பகுதிகளிலுள்ள இறைச்சி, மீன் விற்பனைக் கடைகளில் மாநகராட்சி ஆணையா் சங்கரன் தலைமையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மீன் மாா்க்கெட்டில் ஆய்வு செய்தபோது அங்கு தடையை மீறி மீன்கள் விற்பனை செய்ததாக இரு கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடைகளை உடனடியாக மூடவும் உத்தரவிட்டனா்.

பின்னா், மாா்க்கெட்டுக்கு வெளியே மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த தள்ளுவண்டி வியாபாரிகளை மாநகராட்சிப் பணியாளா்கள் அப்புறப்படுத்தினா். அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், ஐஸ் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, மாங்காய் மண்டி அருகே உள்ள இறைச்சிக் கடைகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, இறைச்சிக் கடைகளைத் தூய்மையாக பராமரிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொதுமக்களுக்கு மட்டும் இறைச்சி விற்பனை செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு கிருமி நாசினி வழங்கிட வேண்டும் என்று வியாபாரிகளை அறிவுறுத்தினா். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்தவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் மாநகரப் பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக 60 கடைகளுக்கு மொத்தம் ரூ. 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையா் சங்கரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com