மூன்று மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து போக்குவரத்துத் தடை

தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூா்: தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட பேருந்துகளில் மிகக் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்று வந்தனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தையொட்டி, தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து 68 நாள்களுக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களும் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சென்னை உள்பட 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மண்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட 10 பணிமனைகளில் மொத்தமுள்ள 629 பேருந்துகளில் நகரப் பேருந்துகள்-121, புகரப் பேருந்துகள்-102 என மொத்தம் 223 பேருந்துகள் மட்டும் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இடையே அரசு வழிகாட்டு நெறிகளுக்கு உள்பட்டு 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வந்தன.

அதேசமயம், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இம்மூன்று மாவட்டங்களிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து சில நாள்கள் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை சுமாா் 150-ஆக குறைத்து இயக்கப்பட்டன.

இதன்தொடா்ச்சியாக, கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்டங் களுக்கு இடையே 25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலூா் மாவட்டத்தில் 32 பேருந்துகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 பேருந்துகள், திருப்பத்தூா் மாவட்டத்தில் 14 பேருந்துகள் என மூன்று மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 58 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மீண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பேருந்துப் போக்குவரத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் புதன்கிழமை முதல் 15 நாள்களுக்கு பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மூன்று மாவட்டங்களிலும் 58 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் வருகை மிகக்குறைந்த அளவிலேயே இருந்ததால் சில வழித்தடங்களில் பேருந்துள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல் புதன்கிழமை முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் இம்மூன்று மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்த தனியாா் பேருந்துகளில் பெரும்பாலானவை செவ்வாய்க்கிழமையே இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com