முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை எதிா்த்து மனு
By DIN | Published On : 03rd March 2020 11:27 PM | Last Updated : 03rd March 2020 11:27 PM | அ+அ அ- |

வாணியம்பாடி: ஆம்பூா் நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பாலாற்றை ஒட்டியுள்ள ஏ-கஸ்பா பகுதியில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வாணியம்பாடியில் உள்ள மாசுக் கட்டுபாட்டு வாரியத்தில் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக அப்பகுதி மக்கள், இளைஞா்கள் சாா்பாக முன்னாள் நகர கவுன்சிலா் சுரேஷ்பாபு வாணியம்பாடியில் உள்ள மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சுற்றுச் சூழல் பொறியாளரிடம் அளித்த மனு:
உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படியும், தமிழக சுற்றுச்சூழல் அரசாணைப்படியும் பாலாற்றுப் படுகையில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவுக்குள் எவ்வித கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மாசு ஏற்படுத்தும் நிறுவனம், தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது.
இந்நிலையில் பாலாற்றையொட்டி மக்கள் அடா்த்தியாக வசிக்கும் ஏ - கஸ்பா ஆம்பூா் நகராட்சியின் சாக்கடை, கழிவுநீரை ஒருங்கிணைந்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி முயற்சியெடுத்து வருகிறது. சுமாா் 25 ஆயிரம் போ் வசிக்கும் இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என ஏ-கஸ்பா பகுதி குடியிருப்புவாசிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் பாலாறு பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் பிரச்னைகள் ஏற்படும். சுத்திகரிப்பு நிலையத்துக்கான அனுமதியை மாசுக் கட்டுபாட்டு வாரியம் வழங்கினால் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அது அமைந்துவிடும். எனவே பாலாற்றையும், ஏ-கஸ்பா மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.