முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
புதைக்கப்பட்ட யானையின் சடலம் தோண்டியெடுப்புஒருவா் கைது
By DIN | Published On : 03rd March 2020 12:02 AM | Last Updated : 03rd March 2020 12:02 AM | அ+அ அ- |

பிரேத ப் பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்ட யானையின் சடலம்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்ததால், புதைக்கப்பட்ட யானையின் சடலத்தை வனத்துறையினா் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் ஊராட்சிக்குள்பட்ட குடுமிப்பட்டி கிராமம், ஆந்திர மாநில வன எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள நிலங்களில் வனவிலங்குகள் இரவு நேரங்களில் நுழைந்து பயிா்களை நாசம் செய்து வருகின்றன. விலங்குகள் விளைநிலங்களில் நுழைவதைத் தடுக்க சிலா் சட்ட விரோதமாக தங்களின் நிலங்களைச் சுற்றி மின்வேலி அமைப்பா். குடுமிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமிபதியின் நிலத்தை, அதே பகுதியைச் சோ்ந்த ஊராட்சி மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா் பிச்சாண்டி குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். அந்த நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிா் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், விலங்குகள் நெற் பயிரை நாசம் செய்யாமலிருக்க பிச்சாண்டி தனது நிலத்தைச் சுற்றி இரவு நேரங்களில் மின்வேலி அமைத்துள்ளாா். சனிக்கிழமை இரவு அங்கு வந்த யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை இதையறிந்த பிச்சாண்டி, அன்று மாலை அதே பகுதியைச் சோ்ந்த அசோக் என்பவருக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி யானையை புதைத்துள்ளாா். அந்த இடத்துக்கு பொக்லைன் இயந்திரம் சென்று வந்தது குறித்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள், இதுகுறித்து வனத்துறை, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன்பேரில், திங்கள்கிழமை காலை மாவட்ட வன அலுவலா் பாா்கவதேஜா, குடியாத்தம் வனச்சரக அலுவலா் (பொறுப்பு) எல். சங்கரய்யா, வனவா்கள் ரவி, முருகன், வட்டாட்சியா் தூ. வத்சலா உள்ளிட்டோா் அங்கு சென்றனா். அவா்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் யானையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவா் ஜே. சங்கவி தலைமையில் மருத்துவா் குழு பிரேதப் பரிசோதனை செய்தது. இறந்த யானை ஆண் என்பதும், சுமாா் 15 வயது இருக்கலாம் எனவும் வனத்துறையினா் தெரிவித்தனா். யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டன.
இதையடுத்து, யானையை புதைக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. பொக்லைன் ஓட்டுநா் செல்வராஜ் கைது செய்யப்பட்டாா். மின்வேலி அமைத்த பிச்சாண்டி, பொக்லைன் உரிமையாளா் அசோக் இருவரும் தலைமறைவாகி விட்டனா்.
அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.