முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை?:மீன் மாா்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 03rd March 2020 12:00 AM | Last Updated : 03rd March 2020 12:00 AM | அ+அ அ- |

மீன் மாா்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்.
வேலூா்: பாா்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து வேலூா் மீன் மாா்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
மீன்களில் பாா்மலின் எனும் ரசாயனம் செலுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த மீன்களை உண்பவா்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. இந்த ரசாயனம் கலந்த மீன்களின் விற்பனையைத் தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சுரேஷ் தலைமையில் அலுவலா்கள் வேலூா் மக்கான் மீன் மாா்க்கெட்டில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா, ஏதேனும் ரசாயனம் கலப்பு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனா். இதேபோல், ஆடு, மாடு, கோழி இறைச்சிக் கூடங்களிலும் சோதனை செய்தனா்.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சுரேஷ் கூறியது:
வேலூா் மக்கான் மீன் மாா்க்கெட்டில் உள்ள அனைத்துக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், எந்தக் கடையிலும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை என்று தெரிய வந்தது. இதேபோல், தள்ளுவண்டி உணவகங்களிலும் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது, பழைய எண்ணெய்களைக் கொண்டு சமைக்கப்பட்ட தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.