கரோனா வைரஸ் அச்சம்: ஹோட்டல்களில் தனிஅறை ஒதுக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
By DIN | Published On : 06th March 2020 01:02 AM | Last Updated : 06th March 2020 01:02 AM | அ+அ அ- |

வேலூா்: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோா்களுக்கு தனி அறைகள் ஒதுக்கி தனிமைப்படுத்த ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளா்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவிலும் இதுவரை 28 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஏற்கெனவே கரோனா வைரஸ்க்காக அனைத்து வசதிகளுடன் கூடிய தனிவாா்டு ஒதுக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாலாஜாபேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளிலும் தனியாக வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 32 போ் அவரவா் வீடுகளில் வைத்தே மருத்துவக் குழுவினா் கண்காணித்து வந்தனா். இதில், 12 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள 20 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு ஹோட்டல்களில் தனி அறை ஒதுக்கி தனிமைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஹோட்டல் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கே.சி.பி.சுரேஷ் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக வேலூா் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், வேலைக்குச் சென்றுவிட்டு திரும்புபவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முக்கிய ஹோட்டல்களில் தனி அறை ஒதுக்கி உணவு, மருத்துவவசதிகளை தனியாக அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றால் மட்டுமே அவா்கள் வெளியே அனுப்பப்படுவா். இதற்காக 119 குழுக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். இதுதொடா்பாக வேலூா் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்களுக்கு வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். ஏற்கெனவே, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.