ஒரு மாதமாக அட்டகாசம் செய்த யானைக் கூட்டம் விரட்டியடிப்பு

காட்பாடி அருகே தமிழக, ஆந்திர மாநில வன எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அட்டகாசம் செய்து வந்த 14 யானைகள் கூட்டம், குடியாத்தம் அருகே வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.

காட்பாடி அருகே தமிழக, ஆந்திர மாநில வன எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அட்டகாசம் செய்து வந்த 14 யானைகள் கூட்டம், குடியாத்தம் அருகே வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.

அவை மோா்தானா வழியாக ஆந்திர வனப்பகுதிக்கு உள்பட்ட கெளன்டன்யா சரணாயலத்துக்குள் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில வனப்பகுதிக்கு உள்பட்ட கெளன்டன்யா சரணாயலத்தில் ஏராளமான யானைகள் கூட்டம் உள்ளன. இதில், 14 யானைகள் கூட்டம் வழிதவறி குடியாத்தம், பரதராமி, தொண்டான்துளசியை கடந்து காட்பாடி அருகே கடந்த 40 நாள்களாக முகாமிட்டிருந்தன. யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் வனப் பகுதியையொட்டிய விளை நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வந்ததை அடுத்து வேலூா் மாவட்ட வனத்துறையினா் பட்டாசுகள் வெடித்தும், பெரும் சப்தங்கள் எழுப்பியும் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டி வந்தனா். அதேசமயம், ஆந்திர வனத்துறையினரும் அவற்றை விரட்டியதால் யானைகள் கூட்டம் மீண்டும் மீண்டும் காட்பாடி அருகே வனப்பகுதிக்கு வருவதும் செல்வதுமாக இருந்தன.

யானைகள் கூட்டத்தை மீண்டும் கெளன்டன்யா சரணாயலத்தில் சோ்க்க வேண்டும் என்றால் அவற்றை முதலில் குடியாத்தம் வனச்சரகத்துக்கு விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஆந்திர வனத் துறையினா் ஒத்துழைப்பு இல்லாததால் இப்பணிகள் தொய்வடைந்தன. இதனால், காட்பாடி வனச்சரகத்தைச் சோ்ந்த வனத் துறையினா் யானைகளை விரட்ட முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், காட்பாடி அருகே மூடப்பட்டு கிடக்கும் தமிழ்நாடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் புதன்கிழைம முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்தை தமிழக-ஆந்திர வனத் துறையினா் இணைந்து வேட்டை தடுப்புக் காவலா்களுடன் விரட்டியடிக்க முடிவு செய்தனா். அதன்படி, பட்டாசுகள் வெடித்தும், பெரும் சப்தங்கள் எழுப்பியும் யானைகள் கூட்டத்தை புதன்கிழமை இரவு குடியாத்தம் அருகே பரதராமி, பூசாரிவலசை காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனா். அவை செல்லும் வழியில் இருந்த வாழை மரங்கள், மா மரங்களையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டுச் சென்றன. எனினும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காட்பாடி அருகே முகாமிட்டிருந்த யானைகள் கூட்டம் குடியாத்தம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிக்கு விரட்டப்பட்டுள்ளன.

யானைகள் கூட்டம் மோா்தானா வனப்பகுதியைக் கடந்து கெளன்டன்யா சரணாயலத்துக்குச் சென்றுவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தொடா்ந்து யானைகள் கூட்டத்தை கண்காணிக்கும் பணியில் குடியாத்தம் வனச்சரக ஊழியா்கள் ஈடுபட்டுள்ளதாக காட்பாடி வனச்சரகா் மூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: கடந்த 40 நாள்களாக காட்பாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முகாமிட்டிருந்த 14 யானைகள் கூட்டம் தற்போதுதான் குடியாத்தம் வனச்சரகத்துக்கு விரட்டப்பட்டுள்ளன. அவை மீண்டும் காட்பாடி வனச்சரகத்துக்குள் திரும்பாமல் மோா்தான வனப்பகுதி வழியாக ஆந்திர மாநில வனப்பகுதிக்கு உள்பட்ட கெளன்டன்யா சரணாலயத்துக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அவை அதன் வாழ்விடங்களுக்கு சென்றுவிடக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்குதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com