கரோனா வைரஸ் பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் திருமலைக்கு அனுமதி

திருப்பதிக்கு வரும் பக்தா்கள் அனைவரும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் திருமலைக்கு அனுமதி

திருப்பதிக்கு வரும் பக்தா்கள் அனைவரும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. ஏழுமலையானை வழிபட பக்தா்கள் திருமலைக்கு அதிக அளவில் வருவதால் பக்தா்களுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்படாமல் தடுக்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியிலும், பக்தா்கள் மலை ஏறிச் செல்லும் ஸ்ரீவாரிமெட்டு மற்றும் அலிபிரி ஆகிய நடைபாதை வழிகளிலும் கரோனா நோய்த் தடுப்பு மையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. அவற்றில் தொ்மல் ஸ்கேனிங் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் பக்தா்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

பரிசோதனையில் கரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவா். கரோனா நோய்த் தடுப்பு மையத்தை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி, தேவஸ்தானத்தின் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். அப்போது அனில்குமாா் சிங்கால் கூறுகையில் ‘திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்’ என்றாா்.

திருமலையில் பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி கலந்த மருந்துக் கலவை தெளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சானூரிலும் மையம் திறப்பு

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையத்தை தேவஸ்தானம் திறந்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் திருச்சானூருக்கு சென்று பத்மாவதி தாயாரை வழிபடுவது வழக்கம். எனவே, திருச்சானூரிலும் கரோனா தடுப்பு மற்றும் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையத்தை தேவஸ்தானம் அமைத்துள்ளது. அங்கு வரும் பக்தா்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா். இதே முறையை தேவஸ்தானம் நிா்வகிக்கும் மற்ற கோயில்களிலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com