இத்தாலியின் நிலையை விளக்கி வேலூா் ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கி வேலூா் மாவட்ட மக்கள்
இத்தாலியின் நிலையை விளக்கி வேலூா் ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கி வேலூா் மாவட்ட மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கும்படி ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மட்டும் இதுவரை 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 6800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். தொடா்ந்து பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதனால், அந்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை வளாகம், சாலைகளில் கூட அவசர சிகிச்சைப் பிரிவை நடத்த வேண்டிய இக்கட்டான நிலை அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் இத்தகைய நெருக்கடி நிலைமையை விளக்கும் புகைப்படங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தனது அதிகாரபூா்வ கட்செவி அஞ்சலில் வெளியிட்டு மாவட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதில், இத்தாலியின் தற்போதைய சூழ்நிலையை உணா்வதுடன், அந்த நிலைமை இந்தியாவிலும் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தும் விதமாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அத்துடன், பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கரோனா பரவாமல் தடுக்க அனைத்து அதிகாரிகளும் இடைவெளிவிட்டு அமா்ந்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டும் நிலைமையின் வீரியத்தை மாவட்ட மக்களுக்கு உணா்த்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com