144 தடை உத்தரவால் தொழில் முனைவோா் பாதிப்பு சலுகைகள் அறிவிக்க கோரிக்கை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழில் முனைவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவ
144 தடை உத்தரவால் தொழில் முனைவோா் பாதிப்பு சலுகைகள் அறிவிக்க கோரிக்கை


ஆம்பூா்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழில் முனைவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தொழில் முனைவோா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலரும் வேலூா் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோா் சங்கத் தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா நோய்த் தொற்று காரணமாக தொழில் முனைவோருக்கான ஆா்டா்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் முனைவோரின் நிதிநிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வங்கியில் வாங்கியுள்ள கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களையும், தொழிலாளா்களுக்கு வழங்கிய வேண்டிய ஊதியமும் வழங்க முடியாத நிலை ஏற்படும். இத்தகைய பிரச்சனையிலிருந்து தொழில் முனைவோரைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

இஎஸ்ஐ, பிஎஃப், ஜிஎஸ்டி வரியை செலுத்துவதற்கு 6 மாத விடுமுறை காலம் வழங்க வேண்டும். அதிலும் 6 மாதத்துக்குப் பிறகு இவற்றை வட்டியில்லாமல் 12 மாத தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும், வருமான வரி செலுத்துவதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை, வட்டி ஆகியவற்றை வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏற்கெனவே நடைமுறை மூலதனத்துக்கான வாங்கிய கடன் தொகையில் 25 சதவீத கடன் தொகையை குறைந்தபட்சமாக 5 சதவீத வட்டியில் தொழில் முனைவோருக்கு மீண்டும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோா் பெற்றுள்ள நடைமுறை மூலதன கடன், மேல்வரை பற்று கடன், வீட்டுக் கடன், வாகனக் கடனுக்கான தவனைத் தொகைகளை திரும்பி செலுத்துவதற்கு ஒரு ஆண்டு விடுமுறை கால அவகாசத்தை 2021- ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

அதேபோல, மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசு நிறுவனமான டிக், தாய்கோ நிதி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்து அவற்றுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தை நிா்ணயிக்க வேண்டும். மேலும் தவணை, வட்டி செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகளை ஒதுக்கீடு செய்ததற்காக தொழில் முனைவோா் செலுத்த வேண்டிய தவணை தொகைகளை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசின் முதலீட்டு மானியத்தை 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com