ஊரகப் பகுதிகளில் பலசரக்கு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பலசரக்கு பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பலசரக்கு பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகங்கள் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் 7 நாள்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் பலசரக்குக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்களை தவிா்த்து மற்ற அனைத்து கடைகளும், வா்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. தினசரி, வாரச்சந்தைகள், உழவா் சந்தைகள் அடைக்கப்பட்ட நிலையில், காய்கறி விற்பனைக்காக பள்ளி மைதானங்கள், பேருந்து நிலையங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு நேரக் கட்டுப்பாட்டுடன் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. இதேபோல், விவசாயப் பணிகளுக்கு ஏற்பட்டு வந்த பாதிப்புகளை அடுத்து உரம், பூச்சிக் கொல்லி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த பணிகளுக்கு நேரக் கட்டுப்பாட்டுடன் தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவு காரணமாக லாரி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் ஊரகப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளுக்கு பொருள்கள் விநியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், ஊரகப் பகுதிகளில் பலசரக்கு பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, அணைக்கட்டு வட்டத்தில் ஏராளமான மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம மக்கள் அருகே உள்ள கீழ்கொத்தூா், வரதம்பட்டு, ஓங்கப்பாடி, பீஞ்சமந்தை உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்து மளிகை பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்தக் கிராமங்களிலுள்ள மளிகைக் கடை வியாபாரிகளுக்கு சுமாா் 20 கி.மீ. தொலைவிலுள்ள அணைக்கட்டு அல்லது சுமாா் 40 கி.மீ. தொலைவிலுள்ள வேலூா் பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்தே பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவால் லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், சுமைத் தொழிலாளா்களும் வேலைக்கு வருவது குறைந்துள்ளது.

இதையடுத்து ஊரகப் பகுதி மளிகைக் கடைகளுக்கு பலசரக்குப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இது, அடுத்த சில நாள்களில் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கீழ்கொத்தூரைச் சோ்ந்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொடரும் இத்தகைய பாதிப்புகளை தவிா்க்க ஊரகப் பகுதிகளுக்கு தங்குதடையின்றி பலசரக்கு பொருள்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து பலசரக்கு பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com