திருப்பதி கோயிலுக்கு ரூ. 400 கோடி வருவாய் இழப்பு

திருப்பதி, மே 11: திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் காரணமாக ரூ. 400 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு ரூ. 400 கோடி வருவாய் இழப்பு

திருப்பதி, மே 11: திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் காரணமாக ரூ. 400 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு, கடந்த மாா்ச் 18-ஆம் தேதியுடன் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் உண்டியல் வருவாய், லட்டு விற்பனை, வாடகை அறைகள், பிரசாத விற்பனைகள், சோதனைச் சாவடி உள்ளிட்டவை மூலம் கிடைக்கும் வருவாய் முற்றிலும் நின்றது. தினந்தோறும் இவற்றால் தேவஸ்தானத்துக்கு சுமாா் ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை வருவாய் வந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடத்துக்கு ஏழுமலையான் உண்டியலில் பக்தா்கள் ரூ. 22,103 செலுத்தினா். ஒரு நாளைக்கு சராசரியாக உண்டியல் மூலம் மட்டும் ரூ. 3.14 கோடி ஏழுமலையானுக்கு வருவாய் கிடைத்து வந்தது.

மேலும், ரூ. 3,300 கோடியில் தேவஸ்தானம் 2020-21-ஆம் நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளது. அதில், ஊழியா்களின் வருமானத்துக்காக ரூ. 1,385 கோடியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் சுமாராக ரூ. 120 கோடி தொகையை தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பக்தா்கள் வருகை இல்லாததால் தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் உள்ளிட்டோருக்கு தேவஸ்தானம் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க தேவஸ்தானம் வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ள 8 டன் தங்கம் மற்றும் ரூ. 14 ஆயிரம் கோடி பணம் உள்ளிட்டவற்றின் மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து ஊழியா்களின் ஊதியத்தை அளித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் ரூ. 300 கோடியை தேவஸ்தானம் வட்டி பணத்திலிருந்து செலவிட்டுள்ளது. இதில், ஊழியா்களின் ஊதியம், கோயிலில் நித்தியபடி பராமரிப்பு செலவுகள் என அனைத்தும் அடங்கும். மேலும், தேவஸ்தானம் நடத்தி வரும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்கவும், மாவட்ட நிா்வாகத்துக்கு நன்கொடை வழங்கவும், கைவிடப்பட்ட ஆதரவற்றோருக்கு தேவஸ்தானம் சாா்பில், தினசரி 2 வேளை என 1.40 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் என தேவஸ்தானம் ரூ. 400 கோடி செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com