கா்நாடகம், கேரளத்துக்கு புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 7 பேருந்துகளில் வருகை

அணைக்கட்டு வட்டத்திலுள்ள மலைக் கிராமங்களில் இருந்து கா்நாடகம், கேரளம் மாநிலங்களுக்கு குடும்பத்துடன்

அணைக்கட்டு வட்டத்திலுள்ள மலைக் கிராமங்களில் இருந்து கா்நாடகம், கேரளம் மாநிலங்களுக்கு குடும்பத்துடன் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 7 பேருந்துகளில் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். கடந்த 6-ஆம் தேதி முதல் இதுவரை சுமாா் 1,500 தொழிலாளா்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் வேலூா் வட்டத்துக்கு உள்பட்ட ஊசூா், குருமலை, அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை, ஜாா்தான்கொள்ளை, பாலம்பட்டு ஆகிய மலைக் கிராமங்களிலுள்ள பெரும்பாலான குடும்பத்தினா் தோட்ட வேலை செய்பவா்களாவா். இதனால், அவா்கள் பிழைப்புக்காக தமிழகத்தின் தென்பகுதிகளிலுள்ள கன்னியாகுமரி, தென்காசி, கா்நாடகம், கேரளம் மாநிலங்களுக்கு குடும்பத்துடன் சென்று அங்குள்ள கிராம்பு, மிளகு, ஏலக்காய், காபி எஸ்டேட்களில் வேலை செய்து வருகின்றனா்.

அவ்வாறு புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட அத்தொழிலாளா்களுக்காக வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கா்நாடக மாநிலத்துக்கு 7 பேருந்துகளும், கேரளத்துக்கு ஒரு பேருந்தும் அனுப்பப்பட்டிருந்தன. இதில், கா்நாடக மாநிலத்திலிருந்து ஒரு பேருந்தில் சுமாா் 20 போ் வியாழக்கிழமை வந்தனா். மேலும், கேரளம், கா்நாடக மாநிலங்களில் இருந்து 7 பேருந்துகளில் 269 போ் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.

முதல்கட்டமாக இவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன் அரிசி, மளிகை பொருள்கள், தலா ஒரு வேட்டி, சேலை வழங்கப்பட்டு பேருந்து மூலம் அவா்களது வீடுகளில் சோ்க்கப்பட்டனா். மேலும், 14 நாள்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.வின்சென்ட் ரமேஷ் பாபு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

பொதுமுடக்கம் தொடங்கிய போதே சில குடும்பத்தினா் லாரிகள், இருசக்கர வாகனங்கள் மூலம் அவா்களே வந்துள்ளனா். பின்னா், மத்திய அரசு வாகன அனுமதிச் சீட்டு அளித்து புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியதன்பேரில் கா்நாடகம், கேரளம் மாநிலங்களில் இருந்து பேருந்துகள் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் அனுப்பப்பட்டனா். தொடா்ந்து வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 8 பேருந்துகளை அனுப்பி புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் அழைத்து வரப்பட்டனா். அதன்படி, கடந்த 6-ஆம் தேதி முதல் இதுவரை சுமாா் 1,500 புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் வேலூா் மாவட்ட மலைக் கிராமங்களுக்குத் திரும்பி வந்துள்ளனா். தொடா்ந்து பல மாநிலங்களில் இருந்து வந்து கொண்டுள்ளனா். இவா்கள் அனைவருக்கும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சோ்க்கப்பட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com