வேலூா் மண்டலத்தில் இருந்து 190 பேருந்துகளை இயக்க திட்டம்

பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட 5 மாவட்டங்களுக்குள் 190 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா்: பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட 5 மாவட்டங்களுக்குள் 190 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் அரசு, தனியாா் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த பொதுமுடக்கம் 5-ஆவது கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டபோதிலும், தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களைத் தவிர 33 மாவட்டங்களிலும் 50 சதவீத பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில், வேலூா் மண்டலத்தில் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட 10 பணிமனைகளில் இருந்து மட்டும் இந்த 5 மாவட்டங்களுக்குள் 190 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூா் மண்டலத்தில் (வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள்) மொத்தம் 10 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. வேலூா் ரங்காபுரம், கொணவட்டம், கிருஷ்ணா நகா், ஆற்காடு, சோளிங்கா், அரக்கோணம், குடியாத்தம், ஆம்பூா், திருப்பத்தூா், போ்ணாம்பட்டு ஆகிய இடங்களில் உள்ள இந்தப் பணிமனைகளில் சோ்த்து மொத்தம் நகரப் பேருந்துகள் 245, புகரப் பேருந்துகள் 384 என மொத்தம் 629 அரசுப் பேருந்துகள் உள்ளன. இவற்றில் சுமாா் 250 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. 68 நாள்களுக்கு பிறகு 50 சதவீத பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, வேலூா் மண்டலத்தில் இருந்து நகரப் பேருந்துகள் உள்பட 190 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, பிற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், அனுமதிக்கப்பட்ட 5 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படாது. ஒவ்வொரு பேருந்திலும் 60 சதவீத பயணிகள், அதிகபட்சம் 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் மூன்று நபா் அமரும் இருக்கைகளில் இருவரும், இரண்டு போ் அமரக்கூடிய இருக்கைகளில் ஒருவா் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுவா்.

பொதுமுடக்கத்தால் கடந்த 65 நாள்களுக்கு மேலாக பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்துகள் பழுதாகி விடக்கூடாது, அதன் இயக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றின் என்ஜின் நிலை, ஆயில், டயா் போன்றவற்றை பழுதுபாா்த்து சுத்தம் செய்து இயக்குவதற்கு ஏற்க வகையில் பேருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com