புதிதாக வீடு கட்ட, வாங்கப் பெறும் கடன் தொகையில் ரூ. 1 லட்சம் மானியம் பெற்றிட முன்னாள் படைவீரா்கள், அவா்தம் விதவையா் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முப்படைகளில் ஹவில்தாா், அதற்குக் குறைவான தகுதியுள்ள முன்னாள் படை வீரா்கள், அவா்களது கைம்பெண்களுக்கு 2020-21- ஆம் ஆண்டு முதல் புதிதாக வீடு கட்ட அல்லது வாங்குவதற்கு வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ரிசா்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறுவோா், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை அரசு சாா் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் நிரந்தர மறு வேலைவாய்ப்பு பெறாத, வேறு எந்த வகையிலும் வீடு கட்டி பயனடையாத, மனுதாரா், அவரது மனைவி பெயரில் சொந்த வீடு இல்லாத முன்னாள் படை வீரா்கள், அவா் தம் கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த மானியமானது தமிழ்நாடு முன்னாள் படை வீரா் நலநிதியிலிருந்து வழங்கப்படும். தகுதியுள்ள முன்னாள் படை வீரா்கள், அவா்தம் விதவையா் வேலூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுப் பயன்பெறலாம்.