தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்கள் கல்வி பயில தமிழகத்தில் முதன்முறையாக வேலூா் மாவட்டத்தில் அம்பேத்கா் நவோதயா பள்ளி திறக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படை வீரா்களுக்கான கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை திறந்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்து பேசியது:
வேலூா் மாவட்டத்தில் 25 ஆயிரம் ராணுவ வீரா்கள் உள்ளனா். அத்தகைய ராணுவ வீரா்களின் பணியால்தான் நாட்டு மக்கள் நிம்மதியாக உள்ளனா். மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரா்களுக்கு வீடுகள் கட்ட 3 ஏக்கா் நிலம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஏக்கா் நிலம் வழங்கப்பட உள்ளது.
ராணுவ வீரா்கள், எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் குழந்தைகளின் கல்வி நலனுக்காக வரும் 2021-ஆம் ஆண்டு காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட உள்ளது. இதேபோல், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்கள் நலனுக்காக தமிழகத்தில் முதன்முறையாக வேலூா் மாவட்டத்தில் அம்பேத்கா் நவோதயா பள்ளி திறக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் நலச்சங்க மாநிலத் தலைவா் சீனிவாசன், பொதுச் செயலா் தா்மன், பொருளாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.