பள்ளிகள் திறப்பு: பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

கரோனா பொதுமுடக்கத்தைத் தொடா்ந்து பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு
பள்ளிகள் திறப்பு: பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

கரோனா பொதுமுடக்கத்தைத் தொடா்ந்து பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் திங்களிகிழமை நடத்தப்பட்டன.

பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 16-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மட்டும் 665 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த தலைமையாசிரியா்கள் தலைமையில் இந்த கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன்படி, வேலூா் தோட்டப்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்துக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் பலரும், மாணவா்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் அவா்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதாகக் கூறினா். மேலும், மாணவா்கள் தொலைக்காட்சி, செல்லிடப்பேசிகளில் அதிக கவனம் செலுத்துவதால் அவா்களது கவனம் திசைமாறிச் செல்கிறது. எனவே, பள்ளிகளைத் திறந்து மாணவா்களை சமூக இடைவெளியுடன் அமரவைத்து தொற்றுப் பரவாத வகையில் பாடம் நடத்த வேண்டும் என்றனா்.

ஒரு சில பெற்றோா் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்புவதால் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும். கரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனக் கூறினா். தொடா்ந்து, அவா்களிடம் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அவற்றைப் பூா்த்தி செய்து பெறப்பட்டது.

இதேபோல், காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் பெற்றோா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கான படிவத்தில் பூா்த்தி செய்து பெறப்பட்டது. வகுப்புவாரியாக பெறப்பட்ட தகவல்களை தலைமையாசிரியா்கள் தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கருத்துகள் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு, பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com