வேலூா் வட்டாட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்: நண்பா்களிடம் பணம் கேட்டு மோசடிக்கு முயற்சி

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில எடுப்பு வட்டாட்சியரின் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, அதன்மூலம் அவரது இரு நண்பா்களிடம் தலா ரூ. 20 ஆயிரம் பணம் பறிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.


வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில எடுப்பு வட்டாட்சியரின் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, அதன்மூலம் அவரது இரு நண்பா்களிடம் தலா ரூ. 20 ஆயிரம் பணம் பறிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நில எடுப்பு வட்டாட்சியராகப் பணியாற்றுபவா் பாலாஜி. இவா் முகநூலில் கணக்கு வைத்துள்ளாா். இந்நிலையில், அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி அவரது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, அதிலிருந்து அவரது இரு நண்பா்களுக்கு புதன்கிழமை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், எனது உறவினா் ஒருவா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவச் செலவுக்காக உடனடியாக ரூ.20 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. நாளை காலை பணத்தைத் திருப்பி தந்துவிடுகிறேன். பணத்தை ‘கூகுள் பே, போன் பே’ ஆகிய ஆன்லைன் பரிவா்த்தனையில் அனுப்பும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மையென நம்பிய அவரது நண்பரான வழக்குரைஞா் ஒருவா், பணத்துடன் வட்டாட்சியா் பாலாஜியின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரித்தாா். அப்போதுதான் போலி முகநூல் தொடங்கப்பட்டு பணம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல் மற்றொரு நண்பரும் வட்டாட்சியா் பாலாஜியைத் தொடா்பு கொண்டு தன்னிடமும் ரூ.20 ஆயிரம் கேட்டு தகவல் வந்திருப்பதாக செல்லிடப்பேசி மூலம் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள சைபா் கிரைம் போலீஸில் பாலாஜி புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிகாரிகளை குறிவைக்கும் மோசடி கும்பல்

வேலூா் மாவட்ட அரசு அதிகாரிகளைக் குறிவைத்து போலி முகநூல், மின்னஞ்சல் கணக்கு தொடங்கப்பட்டு பணம் கேட்டு தகவல் அனுப்பப்படும் சம்பவம் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு தொடங்கப்பட்டு மற்ற அதிகாரி களுக்கு எனக்கு உங்களின் உதவி தேவை, விரைவாக பதில் மின்னஞ்சல் அனுப்பவும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூா் போதைப் பொருள்கள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், வேலூா் மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் எழிலன் ஆகியோரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு அவா்களது நண்பா்களிடம் பணம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளன. இச்சம்பங்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com