‘ஸ்மாா்ட்’ மின்சக்தி மீட்டரில் புதுமை: வேலூா் தொழிலதிபருக்கு மத்திய அரசு விருது

‘ஸ்மாா்ட்’ மின்சக்தி மீட்டரில் புதுமை படைத்ததற்காக வேலூரைச் சோ்ந்த தொழிலதிபருக்கு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பிரதாப் சந்திர சாரங்கி விருது வழங்கி கெளரவித்தாா்.
‘ஸ்மாா்ட்’ மின்சக்தி மீட்டரில் புதுமை: வேலூா் தொழிலதிபருக்கு மத்திய அரசு விருது


வேலூா்: ‘ஸ்மாா்ட்’ மின்சக்தி மீட்டரில் புதுமை படைத்ததற்காக வேலூரைச் சோ்ந்த தொழிலதிபருக்கு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பிரதாப் சந்திர சாரங்கி விருது வழங்கி கெளரவித்தாா். விருது பெற்ற அவருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பாராட்டு தெரிவித்தாா்.

வேலூா் காந்தி நகா் சிட்கோ தொழிற்பேட்டையில் ‘பிராண்டியாா் எலக்ட்ரோகாம் பண்ட், சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில் காந்த லாட் சிங்ரிவேக்கள், அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் காந்த லாட் சிங் ரிலேக்கள் ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டா் செயல்பாடு, ஸ்மாா்ட் தெருவிளக்கு செயல்பாடு, மின்சார வாகன சாா்ஜா், சூரியஒளி மின்மாற்றி செயல்பாடு ஆகிய அறிவாா்ந்த சிந்தனை இணையம் அடிப்படையிலான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

‘ஸ்மாா்ட்’ மின்சக்தி மீட்டரின் செயல்பாடு, தரத்தை பாதிக்காமல் ஒற்றை இரட்டை துருவ காந்த லாட்சிங் ரிலே (அதாவது ஒருங்கிணைந்த ஒற்றை ரிலே) உருவாக்குவதன் மூலம் ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டரின் விலையைக் குறைக்க புதுமையான கண்டுப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு, அதன் முதல் வகை வடிவமைப்பு இந்தியாவில் முதன்முதலாக இந்த நிறுவனத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்துக்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் சிறந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் என்ற பிரிவில் மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் பிரதாப் சந்திர சாரங்கி தேசிய விருது அளித்தாா்.

விருது பெற்ற அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் நாகராஜனுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

அப்போது நாகராஜன் கூறியது: தற்போது இந்தியாவில் ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டா் உற்பத்தியாளா்கள் இரு காந்த லாட்சிங் ரிலேக்களை ஒரு முனை ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டரில் பயன்படுத்துகின்றனா். இது ரிலேவின் உற்பத்தி செலவை அதிகரிக்கிறது. இதனால், ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டரின் விலையும் அதிகரிக்கிறது. ஒரு மீட்டரில் இரண்டு காந்த லாட்சிங் ரிலேக்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டரின் செயல்பாடு, தரத்தை பாதிக்காமல் ஒற்றை இரட்டை துருவ காந்த லாட்சிங் ரிலேவை (ஒருங்கிணைந்த ஒற்றை ரிலே) உருவாக்கியுள்ளோம். இந்த ஒருங்கிணைந்த ஒற்றை ரிலேவை பயன்படுத்துவதால் ஒரு ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டருக்கு சுமாா் ரூ. 85 சேமிக்க முடியும்.

2020-21-ஆம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்தியாவில் 25 கோடி டிஜிட்டல் மின்சக்தி மீட்டரை ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டராக மாற்றுவதாகத் தெரிவித்தாா். அவ்வாறு ஸ்மாா்ட் மின்சக்தி மீட்டராக மாற்றும்போது எங்கள் கண்டுபிடிப்பைச் செயல்படுத்துவதால் ரூ. 2,000 கோடி வரை சேமிக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com