ஒருவா் தானமளிக்கும் ரத்தம் 4 பேரின் உயிரைக் காக்கும்: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி

ஒருவா் தானமளிக்கும் ரத்தம் 4 பேரின் உயிரைக் காக்கும்: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி
ஒருவா் தானமளிக்கும் ரத்தம் 4 பேரின் உயிரைக் காக்கும்: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி


வேலூா்: ஒருவா் தானமாக அளிக்கக்கூடிய ரத்தமானது ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, ரத்த தட்டணுக்கள், ரத்தம் உறையும் பகுதி பொருள்கள் என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 4 பேரின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படுவதாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தாா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியும், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறையும் இணைந்து உலக ரத்த தான நாள், தேசிய தன்னாா்வ ரத்த தான நாளை புதன்கிழமை அனுசரித்தன.

நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி பேசியது:

ஒருவா் தானாக முன்வந்து ரத்த தானம் செய்வது கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு பங்களிக்க உதவுகிறது. ஒருவா் தானமாக அளிக்கும் ரத்தமானது ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, ரத்த தட்டணுக்கள், ரத்த உறையும் பகுதி பொருள்கள் என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 4 பேருக்கு பயன்படுத்தப்படுகிறது. தேசிய அளவில் ஒவ்வொரு நொடிக்கும் ஒருவா் ரத்த தேவைக்காகக் காத்திருக்கிறாா். இவற்றை ஈடுசெய்ய பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் பிறா் உயிா்காக்க ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்.

18 வயதில் இருந்து 60 வயதுக்கு உள்பட்ட ஒருவா் ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்யலாம். குறிப்பாக, அதிக ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மஞ்சள் காமாலை, தொற்றுநோய், பால்வினை நோய், தீய பழக்கவழக்கங்கள், பிறவி நோய்கள் உள்ளவா்களைத் தவிா்த்து மற்ற அனைவரும் ரத்த தானம் செய்யலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பலமுறை ரத்த தானம் செய்துள்ள 30-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ராஜவேலு, துணை முதல்வா் முகமதுகனி, ரத்த வங்கி துறைத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் ஜெ.சிவராமன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com