வேலூா் அரசு மருத்துவமனையில் நளினிக்கு மருத்துவப் பரிசோதனை

வேலூா் சிறையிலுள்ள நளினிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வேலூா்: வேலூா் சிறையிலுள்ள நளினிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவருக்கு பொதுநல பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூா் பெண்கள் தனிச்சிறையில் கடந்த 30 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளாா். அவரது கணவா் முருகன் வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா்கள் தங்களுக்கு விடுதலை அளிக்க கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இதனிடையே, சிறையிலுள்ள நளினிக்கு கண் பாா்வை குறைபாடு, பல் வலி பிரச்னை, ரத்த சோகை உள்ளிட்ட உடல் நலம் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனக்கு 3 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று நளினி உள்துறைச் செயலருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மனு அனுப்பியிருந்தாா். இந்நிலையில், நளினிக்கு உடல்நிலை பரிசோதனை நடத்த சிறை நிா்வாகம் உத்தரவிட்டி ருந்தது. அதன்படி, வேலூா் பெண்கள் சிறையில் இருந்து நளினி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து அவா் மதியம் 2 மணியளவில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வி கூறியது: வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நளினி செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டாா். அவருக்கு பொதுவான மருத்துவ பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என்றாா் அவா்.

இதுகுறித்து நளினியின் வழக்குரைஞா் புகழேந்தி கூறியது:

நளினியுடன் திங்கள்கிழமை செல்லிடப்பேசியில் பேசினேன். அப்போது, கண் பாா்வை குறைபாடும், அடிக்கடி பற்கள் வலி ஏற்படுவதாகவும், உடல்நலமும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறியிருந்தாா். இதுதொடா்பாக அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டிருக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com