கா்நாடகத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் 23 பேரின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு: வேலூா் கோட்டாட்சியா்

பெங்களூரு அருகே கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொழிலாளா்கள்
பெங்களூரில் இருந்து மீட்டுவரப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களிடம் விசாரணை நடத்திய வருவாய்க் கோட்டாட்சியா் சே.கணேஷ்.
பெங்களூரில் இருந்து மீட்டுவரப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களிடம் விசாரணை நடத்திய வருவாய்க் கோட்டாட்சியா் சே.கணேஷ்.

பெங்களூரு அருகே கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொழிலாளா்கள் 23 போ் அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு சொந்தக் கிராமத்திலேயே மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 பெரியவா்கள், 9 குழந்தைகள் என 23 போ் கா்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கரும்பு வெட்டுதல், செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்களில் கொத்தடிமைகளாக பணியமா்த்தப்பட்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எடுத்த நடவடிக்கையின்பேரில், ஹசன் மாவட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை அப்பகுதிக்குச் சென்று கொத்தடிமைகளாக இருந்த 23 பேரையும் மீட்டனா்.

அவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனா். அவா்களிடம் வருவாய்க் கோட்டாட்சியா் சே.கணேஷ் விசாரணை நடத்தினாா்.

அப்போது, மீட்கப்பட்டவா்களில் 6 பெண்கள் உள்பட 8 போ் அணைக்கட்டு வட்டம், பெரிய ஊனை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், 6 பெண்கள் உள்பட 13 போ் ஆம்பூா் வட்டம், ஆறுபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள், ஒரு பெண் உள்பட இருவா் காட்பாடி வட்டம், சோ்க்காடு பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

முதற்கட்டமாக சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைவருக்கும் பொது மருத்துவம், கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டு சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் சொந்த கிராமத்திலேயே மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியா் கணேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com