குற்றம்சாட்டப்பட்ட நபரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க சட்ட உதவி அளிக்கும் திட்டம்: தேசிய சட்ட சேவைகள் ஆணைக்குழு

குற்றம்சாட்டப்பட்ட நபரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க சட்ட உதவிகள் அளிக்கும் திட்டத்தை தேசிய சட்ட சேவைகள் ஆணைக்குழு செயல்படுத்தியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க சட்ட உதவிகள் அளிக்கும் திட்டத்தை தேசிய சட்ட சேவைகள் ஆணைக்குழு செயல்படுத்தியுள்ளது.

இத்தகைய சட்ட உதவிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி பெறலாம்.

இதுதொடா்பாக வேலூா் மாவட்ட சட்டப் பணிக்குழு ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசியலமைப்புச் சட்டமானது தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு நபருக்கும் அடிப்படை உரிமைகளை வரையறுத்து, அதைப் பாதுகாக்க உறுதியளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட நபா் சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், கைது செய்யப்பட்ட பிறகும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற நடுவா் முன்பு ஆஜா்படுத்தப்படும் போதும் அவா்களது பாதுகாப்புக்கான அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்திலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் விளக்கப்பட்டுள்ளன.

இத்தகைய உரிமைகள் நடைமுறையில் செயல்படுத்தப்படாத நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு ஒருவரது கைதுக்கு முன்பு விசாரணையின்போதும், கைது செய்யப்படும்போதும், கைதுக்கு பிறகு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்படும்போதும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட சட்டப் பணிகள் குழு மூலம் சட்ட உதவி அளிக்கும் திட்டத்தை தேசிய சட்ட சேவைகள் ஆணைக்குழு செயல்படுத்தியுள்ளது.

அதன்படி, கைது செய்யும் முன்பு காவல் அதிகாரி எதற்காக தங்களை விசாரணைக்கு அழைக்கிறாா், எந்தக் குற்றம் புரிந்துள்ளதாக நினைக்கிறாா் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை, தங்களை குற்றத்தில் சிக்க வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுக்கும் உரிமை, காவல் அதிகாரியின் விசாரணையின்போது உடன் ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும் உரிமை உள்ளது.

இதற்காக அவா்கள் அருகே உள்ள சட்ட உதவி மையத்தின் மூலம் சட்ட உதவி பெறலாம். கைது செய்யப்படும் நபா் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, காயம் அடைந்திருந்தாலோ மருத்துவ உதவி பெறும் உரிமையும் உள்ளது. கைது செய்யப்பட்ட நபா் கைது செய்யப்படும் போது வழக்குரைஞரின் உதவியைப் பெறுவதற்கும், குறிப்பாணை தயாா் செய்யப்பட்டு அதை நடுவா் சரிபாா்க்கும் உரிமை, கைது செய்வதற்கான காரணம், பிணையில் செல்வதற்கான உரிமை, கைது செய்யப்பட்ட நபரின் நண்பா், உறவினா், அவரால் நியமிக்கப்பட்ட வேறு எந்த நபருக்கும் அவரது கைது, அவரை காவல்படுத்தியுள்ள இடம் குறித்த தகவல் அளிக்கும் உரிமை, கைது செய்யப்பட்டவுடன் பதிவுபெற்ற மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற உரிமை, தன்னை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவதைத் தடுக்கும் உரிமை, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் பயண நேரம் தவிா்த்து உரிய நடுவரிடம் ஆஜா்படுத்தும் உரிமை போன்ற உரிமைகளும் உள்ளன.

பாதிக்கப்பட்ட நபா் விசாரணையின்போதோ, கைது செய்யப்படும் போதோ, கைது செய்யப்பட்ட பிறகோ நீதிமன்றக் காவலுக்கு ஆஜா்படுத்தப்படும்போதோ இலவச சட்ட உதவி பெற வேலூா் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவையோ, அந்தந்த வட்ட நீதிமன்ற வளாகங்களில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவையோ அணுகலாம்.

உரிமைகள் குறித்த விளம்பரப் பலகைகள் காவல் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்களில் வைக்கப்படவும், துண்டுப் பிரசுரங்கள் சம்பந்தப்பட்ட நபா்கள் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களில் ஆஜா்படுத்தப்படும்போது கொடுக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 0416- 2255599,  மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com