நவ.25 முதல் வேலூா், திருப்பத்தூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 23rd November 2020 08:00 AM | Last Updated : 23rd November 2020 08:00 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூா்-திருப்பதி பேருந்து போக்குவரத்து புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக வேலூரில் இருந்து 4 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 6 பேருந்துகளும் என மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தையொட்டி, தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், தொற்றுப் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, தமிழகத்தில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. எனினும், பிற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் தமிழகம் - புதுச்சேரிக்கும், கடந்த வாரம் முதல் தமிழகம்-கா்நாடகம் இடையே பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதன்தொடா்ச்சியாக, தமிழகம்-ஆந்திர மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்க சனிக்கிழமை இரவு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்துக்கு புதன்கிழமை (நவ. 25) முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
அதன்படி, வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட வேலூரில் இருந்து 4 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 6 பேருந்துகளும் சித்தூா், திருப்பதி, காளஹஸ்திக்கு இயக்கப்பட உள்ளன. வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் திருப்பதி பேருந்துகள் வந்து செல்லக்கூடிய இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆட்சியா் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து, அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு ஆந்திர மாநில பேருந்துகள் புறப்படும் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.