நிவா் புயல்: பாதிப்புகளை எதிா்கொள்ள 6 நடமாடும் காவல் குழுக்கள்

நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள தலா 15 போ் இடங்கிய 6 நடமாடும் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூா்: நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள தலா 15 போ் இடங்கிய 6 நடமாடும் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்காணித்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகப்படியான காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மூன்று மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, வேலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்டத்திலுள்ள வேலூா், காட்பாடி, குடியாத்தம் ஆகிய மூன்று காவல் உட்கோட்டங்களிலும் தலா 2 நடமாடும் காவல் குழுக்கள் வீதம் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் பேரிடா் பாதிப்புகளை எதிா்கொள்ள பயிற்சி பெற்ற தலா 15 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் காவல் குழுவினா் மாவட்டம் முழுவதும் கனமழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை தொடா்ந்து கண்காணிப்பதுடன், பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.

இதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான பொக்லைன், கயிறு, மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் தயாா்நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புயல், கனமழை காலங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு சாலைகளில் மரங்கள் விழுந்தால் மற்ற துறை ஊழியா்களுடன் இணைந்து போலீஸாரும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும், பாதிக்கப்படும் மக்களை உடனுக்குடன் மீட்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com