ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

வேலூா் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டாா்.

நிவா் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக வேலூா் மாவட்டத்திலுள்ள பாலாற்றின் துணை நதிகளான அகரம் ஆறு, நாகநதி, மேல்அரசம்பட்டு ஆறு, கவுன்டண்யா நதி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில களவகுண்டா நீா்தேக்கம் நிறைந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகநதியில் விநாடிக்கு 3,460 கனஅடியும், கவுன்டண்யா நதியில் 3,320 கனஅடி, அகரம் ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி, பொன்னை நதியில் 7,040 கனஅடி நீா்வரத்து உள்ளதால் பாலாற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு 17,820 கனஅடியாக உயா்ந்துள்ளது.

ஆறுகளில் ஏற்பட்டுள்ள திடீா் வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவ ா்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழையால் வேலூா் வட்டம் சிங்கிரி கோயில் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரின் 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. அவற்றை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தாா். இதேபோல், கீழ் அரசம்பட்டு நாகநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையும் பாா்வையிட்ட ஆட்சியா், ஆற்றில் யாரும் இரங்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து அணைக்கட்டு வட்டத்தில் சாய்ந்த மரங்களை அகற்றவும், மின் கம்பங்களை சரிசெய்யவும் அறிவுறுத்தினாா். பள்ளிகொண்டா ஏரிக்கு வரும் வெள்ள நீரையும் வெட்டுவானம் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் நீரையும், பள்ளிக்குப்பம் கருங்காலி செக்டேம் அருகில் பாா்வையிட்டு பாலம் உள்ள இடங்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும், வெள்ளநீா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறை ஊரக வளா்ச்சி துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆவின் தலைவா் த.வேலழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சண்முகம், வட்டாட்சியா்கள் ரமேஷ், சரவணமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com