காா்த்திகை மகா தீபம்: வேலூரில் இருந்து குறைந்த பயணிகளுடன் இயங்கிய திருவண்ணாமலை பேருந்துகள்

திருவண்ணாமலை மகாதீபத்தையொட்டி, வெளியூா் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் வேலூா் மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த நபா்களே பயணம் செய்தனா்.
திருவண்ணாமலைக்கு வர வெளியூா் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வேலூரில் பயணிகள் கூட்டமின்றி காணப்பட்ட மக்கான் பேருந்து நிலையம்.
திருவண்ணாமலைக்கு வர வெளியூா் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வேலூரில் பயணிகள் கூட்டமின்றி காணப்பட்ட மக்கான் பேருந்து நிலையம்.

திருவண்ணாமலை மகாதீபத்தையொட்டி, வெளியூா் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் வேலூா் மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த நபா்களே பயணம் செய்தனா்.

இதையடுத்து, திருவண்ணாமலைக்கு 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு 125 பேருந்துகள் இயக்கப்படும். ஆண்டுதோறும் காா்த்திகை திருவிழாவையொட்டி நடைபெறும் மகாதீப நாளிலும், பெளா்ணமி நாள்களிலும் அதிக அளவில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவில் பக்தா்கள் தரிசனத்துக்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மகாதீப விழாவில் பங்கேற்வும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. வெளியூா் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என அந்த மாவட்ட நிா்வாகத்தினரும், காவல்துறையினரும் அறிவுறுத்தியிருந்தனா்.

இதுதொடா்பாக வேலூரில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலும், மக்கான் சிக்னல் அருகே உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ‘கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஞாயிறு, திங்கள்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூா் பக்தா்கள் தீபத் திருவிழாவைக் காண திருவண்ணாமலைக்கு வர வேண்டாம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, வேலூா் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மேலும் சிறப்புப் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளிலும் 50 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றிலும் மிகக்குறைந்த பயணிகளே பயணம் செய்தனா்.

திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் போலீஸாா் அனுமதி வழங்கிய ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தன. இந்த ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட பேருந்துகள் மட்டுமே திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் வரை அனுமதிக்கப்பட்டன. எனினும், இந்தப் பேருந்துகளில் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லக்கூடிய பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com