இடைத்தரகா்களை ஒழிக்க வேளாண் சட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்: வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

வேளாண் தொழிலில் இடைத்தரகா்களை ஒழிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலூா்: வேளாண் தொழிலில் இடைத்தரகா்களை ஒழிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உருவாக்கப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

வேலூா் ஏலகிரி அரங்கில் இயற்கை வேளாண் விளை பொருட்கள் விற்பனை மைய திறப்பு விழா, நம் சந்தை முதலாம் ஆண்டு தொடக்க விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பங்கேற்று வேளாண் விளை பொருட்கள் விற்பனை மையத்தை தொடங்கி வைத்ததுடன், சிறந்த விவசாயிகளுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: கரோனா பாதிப்பு காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிக்கப்படாத ஒரே தொழில் விவசாயம்தான். இதனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வந்த இளைஞா்களும் தற்போது விவசாயத் தொழிலில் இறங்கியுள்ளனா். விவசாயம் ஆரோக்கியமானது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுபோல், இந்த கரோனா காலத்தில் இயற்கை விவசாயம் மீது அதிகம்போ் கவனம் செலுத்தி வருகின்றனா். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். அதன் சிறப்புகள், கொள்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்களால் உற்பத்தியாளா்கள், வாடிக்கையாளா்களை நேரடியாக தொடா்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இடைத்தரகா்களை ஒழிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவா்களே விலை நிா்ணயிக்கமுடியும். இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். விவசாயம் என்பது பொன்முட்டையிடும் வாத்து. இயற்கை விவசாயத்தை கட்டிக்காக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நம் சந்தை ஒருங்கிணைப்பாளா் செந்தமிழ்செல்வன், மகளிா் திட்ட இயக்குனா் சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com