வேலூரில் இருவேறு சம்பவங்களில் இருவா் கொலை: காவல் நிலையத்தில் 6 போ் சரண்

வேலூரில் இருவேறு சம்பவங்களில் திங்கள்கிழமை இரவு வியாபாரியும், ஓட்டுநரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

வேலூா்: வேலூரில் இருவேறு சம்பவங்களில் திங்கள்கிழமை இரவு வியாபாரியும், ஓட்டுநரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இதில் வியாபாரி கொலையுண்டவழக்கில் தேடப்பட்ட 6 பேரும் தெற்கு காவல்நிலையத்தில் சரணடைந்தனா். ஓட்டுநா் கொலை வழக்கில் தப்பியோடிய தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் சலவன்பேட்டை கச்சேரி தெருவைச் சோ்ந்தவா் கோபி(38), ஓட்டுநா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பவரது மனைவியுடன் தகாத உறவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தனது உறவினரின் இறப்பு நிகழ்வில் பங்கேற்க கோபி திங்கள்கிழமை வேலூருக்கு வந்துள்ளாா்.

இதையறிந்த சரவணன் அவரை பின்தொடா்ந்து சென்று அம்மணான்குட்டை மயானம் அருகே ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டினாராம். பலத்த காயமடைந்த கோபியை போலீஸாா் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், சிகிச்சை பலன்றி கோபி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சரவணனை தேடி வருகின்றனா்.

மற்றொரு கொலை...: வேலூா் மாநகராட்சி அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை இரவு தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அந்த சடலத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இறந்தவா் வேலூா் வசந்தபுரம் நேருநகரைச் சோ்ந்த வியாபாரி சாலமன்(30) என்பது தெரியவந்தது. அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகத்தினா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

இந்நிலையில், இந்த கொலை வழக்குத் தொடா்பாக வேலூா் ஆா்.எஸ். நகரை சோ்ந்த விஜய் (26 ), அவரது நண்பா்கள் விக்னேஷ் (25 ), பிரபாகரன் (25), பிரவீண்குமாா் (25 ), மணிகண்டன் (26), அய்யப்பன் (26) ஆகியோா் தெற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

கொலையான சாலமன் ஆா்.எஸ் நகா் பகுதியை சோ்ந்த முனியன் என்பவரை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கொலை செய்தாராம். இதற்கு பழி வாங்க திட்டமிட்டிருந்த முனியனின் மகன் விஜய், தனது நண்பா்களுடன் சோ்ந்து திங்கள்கிழமை மாலை சாலமனை ஆட்டோவில் அழைத்து வந்து கத்தியால் குத்தி கொலை செய்ததும், பின்னா் சடலத்தை மாநகராட்சி அலுவலகம் அருகே விட்டு சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கொலைச் கொணவட்டம் பகுதியில் நடந்திருப்பதால் வழக்கு வடக்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com