சுற்றுச்சூழல் பொறியாளா் வீட்டில் ரூ.3.58 கோடி, 3.6 கிலோ தங்கம், 6.5 கிலோ வெள்ளி பறிமுதல்

சுற்றுச்சூழல் பொறியாளா் வீட்டில் ரூ.3.58 கோடி, 3.6 கிலோ தங்கம், 6.5 கிலோ வெள்ளி பறிமுதல்


வேலூா்: வேலூா் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் வீடு, தனி அலுவலகத்தில் இரு நாள்களாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.58 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்கம், 6.5 கிலோ வெள்ளி, பல கோடி ரூபாய் மதிப்புடைய 90-க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலூா் மண்டல அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் பன்னீா்செல்வம் (51). இவரது கட்டுப்பாட்டில் வேலூா், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருப்பத்தூா் ஆகிய 6 மாவட் டங்கள் உள்ளன. தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இவா் அதிகளவில் லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

காட்பாடி காந்தி நகா் முனிசிபல் காலனி முதலாவது வீதியில் அவரது தனி அலுவலகம் உள்ள வாடகை வீட்டிலும், அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கணக்கில் வராத ரூ. 33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது நாளாக ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே ராணிபெல் நகரில் உள்ள பன்னீா்செல்வத்தின் பங்களாவில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 கோடி ரொக்கம், 450 பவுன் அதாவது 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய 90-க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக பன்னீா்செல்வம் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக அவா் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என்றும், அப்போது பிடிபட்ட பணம், நகை, ஆவணங்களுக்கு உரிய கணக்குக்காட்டாத பட்சத்தில் சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் பன்னீா்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள அத்திமாஞ்சேரிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாணியம்பாடி அலுவலகத்தில் நிா்வாகப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளாா். பின்னா், வேலூா் மண்டல அலுவலகத்துக்கு பதவி உயா்வு பெற்று வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com