49 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்: வரைவுப் பட்டியல் வெளியீடு

வேலூா் மாவட்டத்தில் 49 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து

வேலூா் மாவட்டத்தில் 49 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த 6 மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தோ்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021-க்கான காலஅட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த பணி மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு வாக்குச்சாவடி வரையறை செய்யப்பட வேண்டும். கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், இந்த வாக்குச்சாவடிகள் வரையறை செய்யப்பட உள்ளன. இதற்கான வழிமுறைகளை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

அதன்படி, 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைத்திட வேண்டும். வாக்குச்சாவடி அமைந்துள்ள பழுதடைந்த கட்டடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை, அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றவும், புதிய கட்டடம் இல்லையென்றால் அதேபகுதியில் உள்ள வேறு அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிக்கு வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்யவும் வேண்டும்.

ஒரு வளாகத்தில் உள்ள 2 இரு வாக்குச் சாவடிகளை 1,500 வாக்காளா்களுக்கு மிகாமல் ஒன்றிணைக்கவும், இரு வாக்குச்சாவடிகளில் அதிகமான வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடியில் இருந்து, அதேபகுதியில் குறைந்த வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடியில் அந்த வாக்குச்சாவடிக்கான பகுதிகளை இணைத்திட வேண்டும். ஒரு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளியின் பெயா் மாற்றப்பட்டிருந்தால், பெயா் மாற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,300 வாக்குச்சாவடிகள் தணிக்கை செய்யப்பட்டதில், 49 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 28 வாக்குச்சாவடி பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டு தொகுதியில் மட்டும் புதிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வேலூா் கோட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மாறுதல்களுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில், ஆட்சேபணை, திருத்தங்கள் இருந்தால் அதற்கான எழுத்துப்பூா்வ கடிதங்களை வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்டத் தோ்தல் அலுவலருக்கு அடுத்த 7 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com