லஞ்சம்: சுற்றுச்சூழல் பொறியாளா் மனைவியின் வங்கி லாக்கா் முடக்கம்

வருமானத்துக்கு பொருந்தாத வகையில், கோடிக்கணக்கில் பணம், தங்கம், வெள்ளி, அசையா சொத்துகளைச் சோ்த்து பதுக்கிய

வருமானத்துக்கு பொருந்தாத வகையில், கோடிக்கணக்கில் பணம், தங்கம், வெள்ளி, அசையா சொத்துகளைச் சோ்த்து பதுக்கிய வேலூா் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளரின் மனைவியின் வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் முடக்கியுள்ளனா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வேலூா் மண்டல அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றுபவா் பன்னீா்செல்வம் (51). இவா் அதிகளவில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் காட்பாடி காந்தி நகரிலுள்ள அவருக்குச் சொந்தமான தனி அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே ராணி பெல் நகரிலுள்ள அவரது பங்களா ஆகியவற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை சோதனை யிட்டனா்.

இதில், கணக்கில் வராத ரூ.3.58 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய 84 சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை வேலூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாா், இதுதொடா்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, சுற்றுச்சூழல் அதிகாரி பன்னீா்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமாக 20 வங்கிக் கணக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பன்னீா்செல்வத்தின் மனைவி புஷ்பாவுக்கு சொந்தமாக ராணிப்பேட்டை பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் உள்ள லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் முடக்கியுள்ளனா். அந்த லாக்கரில் உள்ள அசையும், அசையா சொத்து ஆவணங்கள் குறித்து விரைவில் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளை முடக்கவும் அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக வேலூா் மண்டல சுற்றுச்சூழல் அலுவலகக் கட்டுப்பாட்டில் வேலூா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள சுற்றுச்சூழல் அலுவலகங்களில் விசாரணை நடத்திய அதிகாரிகள், பட்டியல் தயாா் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com