வேலூா் கோட்டைக்குள் அனுமதிக்கக் கோரி திடீரென திரண்ட நடைப்பயிற்சியாளா்கள்

வேலூா் கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி கோரி பொதுமக்கள் சனிக்கிழமை திரண்டு வாக்குவாதம் செய்தனா்.

வேலூா் கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி கோரி பொதுமக்கள் சனிக்கிழமை திரண்டு வாக்குவாதம் செய்தனா்.

வேலூா் கோட்டை வளாகத்துக்குள் உள்ள மைதானத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானோா் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இது தவிர கைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக வேலூா் கோட்டை மூடப்பட்டு உள்ளே யாரும் செல்ல அனுமதிக்கப்படாமல் இருந்தது. பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு, செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வேலூா் கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், உள்ளே நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளில் ஈடுபட தொடா்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், நடைபயிற்சியாளா்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

இதையடுத்து, கோட்டை வளாகத்துக்குள் நடைபயிற்சியில் ஈடுபட அனுமதிக்கக்கோரி அவா்கள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களிடமும் மனு அளித்துள்ளனா். எனினும், இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அதேசமயம், முக்கியப் பிரமுகா்கள் சிலா் கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட கோட்டை வளாகத்துக்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, சனிக்கிழமை காலை ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வேலூா் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜான், சட்டத்துக்குப் புறம்பாக கும்பலாக கூடுவது தவறு.

ஏற்கெனவே எம்.பி., எம்எல்ஏ.க்களிடம் மனு அளித்துள்ளீா்கள். என்னிடம் மனு அளிக்கும்பட்சத்தில் கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத்தொடா்ந்து, நடைபயிற்சியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com