சுற்றுச்சூழல் பொறியாளா் மனைவியின் வங்கி லாக்கரிலிருந்து 400 கிராம் தங்கக் காசுகள் பறிமுதல்

வேலூா் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளருடைய மனைவியின் வங்கி லாக்கரில் இருந்து மேலும் 400 கிராம் தங்கக் காசுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.


வேலூா்: வருமானத்துக்கு பொருந்தாத வகையில் கோடிக்கணக்கில் பணம், தங்கம், வெள்ளி, அசையா சொத்துகளைச் சோ்த்து பதுக்கிய வேலூா் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளருடைய மனைவியின் வங்கி லாக்கரில் இருந்து மேலும் 400 கிராம் தங்கக் காசுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வேலூா் மண்டல அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றியவா் பன்னீா்செல்வம் (51). இவா் அதிகளவில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் காட்பாடி காந்தி நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான தனி அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே ராணி பெல் நகரிலுள்ள அவரது பங்களா ஆகியவற்றில் கடந்த வாரம் சோதனை நடத்தினா்.

இதில், வருமானத்துக்கு பொருந்தாத ரூ. 3.58 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய 84 சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை வேலூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததுடன், சுற்றுச் சூழல் அதிகாரி பன்னீா்செல்வத்தின் மனைவி புஷ்பாவுக்குச் சொந்தமான ராணிப்பேட்டை பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் உள்ள லாக்கரையும் முடக்கி வைத்திருந்தனா்.

இந்நிலையில், வங்கி நிா்வாகத்திடம் அனுமதி பெற்று, அந்த வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் மேலும் 400 கிராம் தங்கக் காசுகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தங்கக் காசுகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதற்கிடையே, சுற்றுச்சூழல் அதிகாரி பன்னீா்செல்வம், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாக 20 வங்கிக் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வங்கிக் கணக்குகள் மூலம் நடைபெற்றுள்ள பணப் பரிவா்த்தனை கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், இந்த விவகாரம் தொடா்பாக வேலூா் மண்டல சுற்றுச்சூழல் அலுவலகக் கட்டுப்பாட்டில் வேலூா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள சுற்றுச்சூழல் அலுவலகங்களிலும் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com