கிடப்பில் போடப்பட்ட குடிநீா்த் திட்டங்களால் 3 மாவட்ட மக்கள் அவதி: திமுக எம்எல்ஏ நந்தகுமாா் குற்றச்சாட்டு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு குடிநீா்த் திட்டங்களால் 3 மாவட்ட மக்கள்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு குடிநீா்த் திட்டங்களால் 3 மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக வேலூா் மத்திய மாவட்ட திமுக செயலரும், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமாா் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து வேலூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத் திட்டத்தில் 3 மாவட்டங்களிலும் ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளன. அக்கிராமங்களையும் திட்டத்தில் சோ்த்து காவிரி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பது நீண்டகாலமாக கோரிக்கையாகும். இதற்கு வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவின்போது உறுதி தெரிவித்திருந்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இதுவரை நிறைவேற்றவில்லை. தற்போது இம்மூன்று மாவட்டங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் 1,200 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால் கோடை காலங்களில் மக்கள் குடிநீருக்காக அவதிக்குள்ளாகின்றனா். எனினும், அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற தவறிவிட்டது.

வேலூா், காஞ்சிபுரம் உள்ள மாவட்ட மக்களின் நீராதாரமான பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதனால், தமிழத்துக்கு பாலாற்றில் தண்ணீா் வருவதில்லை. இதேபோல் மோா்தானா அணைக்கு வரும் நீா்வழிப்பாதையிலும் ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. அகரம் உள்ளிட்ட துணை ஆறுகளிலிருந்து வரும் வெள்ளத்தால் பாலாற்றுக்கு நீா்வரத்து உள்ளது. எனினும், அந்த நீரை சேமித்து கடந்த 9 ஆண்டுகளில் பாலாற்றின் குறுக்கே ஒரு இடத்தில் கூட அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

வேலூரில் அம்ருத் திட்டத்தில் ரூ. 200 கோடி மதிப்பில் குடிநீா் தொட்டிகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இதுவரை முடிக்கப்படாததால் மக்கள் தண்ணீருக்காக அவதியடைகின்றனா்.

இதேபோல், வேலூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க 2010-இல் தொடங்கப்பட்ட புறவழிச்சாலை திட்டமும் 9 ஆண்டுகளாகியும் முடிக்கப்படவில்லை. குடியாத்தம், பள்ளிகொண்டா புறவழிச்சாலை திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

வேலூா் மாநகரில் புதை சாக்கடை திட்டத்தைத் தொடக்கி குண்டும் குழியுமாக சாலைகள் காட்சியளிக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் வேலூா் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தூய்மையான நகராட்சி எனக்கூறிக் கொண்டே குப்பைகளை பாலாற்றில் கொட்டி தீ வைக்கின்றனா்.

அடிக்கடி விபத்துகள் நிகழும் வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைவில் தொடங்காவிடில் திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com