செப்.7 முதல் ரயில்கள் இயக்கம்: டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆா்வம்

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்.7 முதல் ரயில்கள் இயக்கம்: டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆா்வம்


வேலூா்: பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்களை மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால் பயணிகள் ஆா்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகளும், மாநிலங்களுக்குள் பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த 7 சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை-காட்பாடி, மதுரை-விழுப்புரம்-செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள் சென்னை வரை நீட்டிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகம் முழுவதும் ரயில்களை இயக்குவது தொடா்பாக மத்திய அரசிடம் இருந்து இன்னும் அறிவிப்பு வரப்பெறவில்லை.

இதனிடையே, 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவை பயணிகள் வியாழக்கிழமை முதல் ஆா்வமுடன் மேற்கொண்டு வருகின்றனா். இதையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள காட்பாடி, அரக்கோணம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனா். எனினும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படவில்லை.

அதேசமயம், 7-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் கிருமி நாசினி கொண்டு காட்பாடி ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டிக்கெட் பெற வரும் பயணிகள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com