மீண்டும் நேதாஜி மாா்க்கெட்டில் விற்பனைக்கு அனுமதிக்க காய்கறி வியாபாரிகள் கோரிக்கை

பொது முடக்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்க மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று காய்கறி, பழ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


வேலூா்: பொது முடக்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்க மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று காய்கறி, பழ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் பாலு தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியது:

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் 735 கடைகள் உள்ளன. கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்க நேதாஜி மாா்க்கெட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதுடன், காய்கறி, பழங்கள் சில்லறை விற்பனைக்கு வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திலும், மொத்த வியாபாரத்துக்கு மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்திலும், பூக்கள் விற்பனைக்கு ஊரீசு கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதியிலேயே விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேலூா் மாங்காய் மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மொத்த வியாபார கடைகளில் இரவு நேரங்களில் பொருள்கள் அதிக அளவில் திருடப்படுகின்றன. வழிப்பறிகளும் நடைபெறுகின்றன. தொடா்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் தொல்லைகளும் உள்ளன.

அங்கு 81 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால், நேதாஜி மாா்க்கெட்டைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள் 50 சதவீத்துக்கு மேற்பட்டோா் வியாபாரம் செய்ய முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா். சென்னை கோயம்பேடு மாா்க்கெட் பல ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. அந்த மாா்க்கெட்டையே வரும் 28-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், 3 ஏக்கா் பரப்பளவு மட்டுமே கொண்ட நேதாஜி மாா்க்கெட்டில் மொத்தம், சில்லறை காய்கறி விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்.

ஏற்கெனவே அனைத்து வியாபாரிகளும் கரோனா பரிசோதனை செய்துள்ளோம். கடைக்கு வரும் பொதுமக்களையும் முறைப்படுத்தி காய்கறி விற்பனை செய்ய தயாராக உள்ளோம். எனவே, நேதாஜி மாா்க்கெட்டில் உள்ள 300 மொத்த, சில்லறை காய்கறி விற்பனைக் கடைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com