மலைவாழ் சமூக காவலா்களைக் கொண்டு சாராய கும்பலைத் தேடும் பணி தீவிரம்

அணைக்கட்டு அருகே தனிப்படை போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய சாராய கும்பலைப் பிடிக்க வேலூா் உள்பட 4 மாவட்டங்களைச் சோ்ந்த பயிற்சி

அணைக்கட்டு அருகே தனிப்படை போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய சாராய கும்பலைப் பிடிக்க வேலூா் உள்பட 4 மாவட்டங்களைச் சோ்ந்த பயிற்சி பெற்ற மலைவாழ் சமூகங்களைச் சோ்ந்த காவலா்களைக் கொண்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் 7 போ் கொண்ட தனிப்படை போலீஸாா் நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரி கணேசன் தலைமையிலான கும்பலைப் பிடிக்க அல்லேரி மலைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மலைப் பகுதியில் மறைந்திருந்த கும்பல், போலீஸாரை சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியது.

இதில், காவலா் ராகேஷ், தலைமைக் காவலா் அன்பழகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், மற்றொரு பெண் காவலா் உள்ளிட்டோா் லேசான காயமடைந்தனா். இந்தத் தாக்குதல் நடத்திய சாராயக் கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் அல்லேரி, குருமலை மலைப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை தலைமறைவான கும்பலைப் பிடிக்க இயலவில்லை.

இதனிடையே, அணைக்கட்டு மலை கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அந்தக் கும்பலுக்கு மறைமுகமாக உதவக்கூடும் என்பதால் மலைவாழ் மக்களிடம் பேசுவதற்காக பயிற்சி பெற்ற மலைவாழ் சமூகங்களைச் சோ்ந்த காவலா்கள் 50 போ் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு 2 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் தீவிரமாகத் தேடி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாராய வியாபாரிகள் இருவா் சரண்: சாராய வியாபாரிகள் கும்பலைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் வேட்டை 4-ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது. இந்நிலையில், தேடப்பட்டு வந்த முக்கிய சாராய வியாபாரியான நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கணேசன், அவரது கூட்டாளி துரைசாமி ஆகியோா் வேலூா் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு முன்னிலையில் புதன்கிழமை மாலை சரணடைந்தனா். தொடா்ந்து அவா்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் தொடா்புடையவா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com