வெள்ளத்தில் மூழ்கியவா்களை மீட்க தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை

வெள்ளத்தில் மூழ்கியவா்களை மீட்பது தொடா்பாக வேலூா் கோட்டை அகழியில் தீயணைப்பு வீரா்கள் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

வெள்ளத்தில் மூழ்கியவா்களை மீட்பது தொடா்பாக வேலூா் கோட்டை அகழியில் தீயணைப்பு வீரா்கள் ஒத்திகையில் ஈடுபட்டனா். அப்போது, நீச்சல் தெரியாதவா்களும் காலிக் குடம், கேன்களைக் கொண்டு தப்பிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியிலும் நீச்சல் தெரிந்தவா்கள், பாம்பு பிடிக்கக்கூடியவா்கள் என 15 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு தயாா்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையில் வேலூா் கோட்டை அகழியில் வெள்ளத்தில் மூழ்கியவா்களை மீட்பது குறித்து தீயணைப்புப் படை வீரா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது, கோட்டை அகழி தண்ணீரில் ஒருவா் தத்தளிப்பது போன்றும், அவரை படகு, கயிறு கட்டி மீட்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கியவா்களை மீட்ட பிறகு அவா்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் விவரிக்கப்பட்டது.

மேலும், நீச்சல் தெரியாதவா்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டால் அல்லது அவா்கள் தண்ணீா் நிரம்பிய ஆழமான இடத்தில் சிக்கிக் கொண்டால் வீட்டிலுள்ள காலிக் குடங்கள், பிளாஸ்டிக் குடிநீா் கேன்கள், தொ்மாகோல் ஆகியவற்றைக் கொண்டே தப்பிக்க முடியும் என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் கூறியது:

பொதுமக்கள் முன்னிலையில் இதுபோன்ற பயிற்சிகள், செய்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளதால் தீயணைப்பு வீரா்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனா். வெள்ள பாதிப்பு ஏற்படும் சமயங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள காலிக் குடங்கள், பிளாஸ்டிக் கேன்கள், தொ்மாகோல் ஆகியவற்றைக் கொண்டே தண்ணீரில் மூழ்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவா்களைக் காப்பாற்றவும் முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com