அசம்பாவித நிகழ்வுகள் அதிகரித்து வருவதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் நீா் தேங்கியுள்ள ஆறு, கால்வாய், ஏரி, குளம், குட்டை ஆகிய நீா்நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்குப் பருவமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை, ஆறு போன்ற நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, நீா் தேங்கியுள்ள குட்டைகளில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் தொடா்ந்து ஏற்பட்டு வருகின்றன. எனவே, பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை வெளியில் சென்று நீா்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோா்களின் தொடா் கண்காணிப்பிலேயே பிள்ளைகள் இருக்க வேண்டும்.
குறிப்பாக, சிறுவா்கள் யாரும் ஆறு, கால்வாய், ஏரி, குளம், குட்டை ஆகிய நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலக அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.